Monday, November 23, 2009

லவ் ஜிஹாத்-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியிலுள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகள் இஸ்லாத்திற்கு மதம் மாறத் தீர்மானித்துள்ளனர். முன்னர் இவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷாஹின்ஷா என்பவரையும் கேரள அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் என்பவரையும் விரும்பித் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தகவல் கிடைத்ததும் அப்பெண்களின் பெற்றோர் காவல்நிலையத்தில், "தங்கள் மகள்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும்" கூறி அவ்விருவர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுப் செய்துள்ளது. இதற்கிடையில் வழக்குத் தொடுக்கப்பட்ட இருவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.

பெற்றோரின் புகாரை மறுத்து, "தங்களின் சொந்த விருப்பப்படியே இஸ்லாத்திற்கு மாறியதாகவும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும்" அவ்விரு பெண்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதாரணமாக மேஜர் ஆனவர்களின் மணமுடிவுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்புபவர்களைத் திருமணம் செய்து இணைத்து வைக்கும் நீதிமன்றம், அப்பெண்களின் வாக்குமூலத்திற்குப் பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அவ்விளைஞர்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்தது.

ஆரம்பத்தில் முதல் தகவலறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், "வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு எதிராக அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதனை அப்பெண்கள் மறுத்ததோடு, தங்கள் "சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் புரிந்ததாகவும் தங்களை எவரும் மதம்மாறக் கட்டாயப்படுத்தவில்லை" என்றும் காவல்துறை தாங்கள் கூறாததை எழுதியுள்ளதாகவும் மறுத்திருந்தனர். இருப்பினும் காவல்துறை அவ்விளைஞர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்தது.

இவ்வழக்கின் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையிலேயே, உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதத்திலான ஆட்சேபகரமான கருத்துகளைத் தன் உத்தரவில் கூறியுள்ளது.

கேரள உயர்நீதி மன்றம் தன் உத்தரவில், "முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இப்படிப் பட்ட பெண்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்" என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.

"மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்" எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், "இவ்வாறு செயல்படும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'ரோமியோ ஜிஹாத்' ஆகிய இயக்கங்களின் செயல்பாட்டையும் அந்த இயக்கங்களின் நோக்கம், அமைப்பு, பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச அளவிலும் இவ்வியக்கங்களின் தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டுப் பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புளுடனான தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி டி.ஐ.ஜியும் மத்திய உள்துறை அமைச்சகமும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறி முன்ஜாமீன் வழக்கை இரு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

1. இரு இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாதிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ள இரு பெண்களும் வயதுக்கு வந்த மேஜர்களாகும்.

2. அவ்விரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறி, முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் புரிந்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளதோடு தங்கள் கணவர்களுக்கு எதிராகத் தங்களிடம் எவ்விதப் புகாரும் இல்லை என்றும் மறுத்திருக்கின்றனர்.

"சட்ட நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளப்படும்"

முஸ்லிம் லீக் பொதுச் செயலர்!

"ஒரு சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் எனத் தோன்றும் விதத்தில் நீதிமன்றத்திலிருந்து வெளியாகியிருக்கும் விமர்சனங்களைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவசர ஆலோசனை நடைபெறும்" எனக் கேரள முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி அறிவித்துள்ளார்.

"சங்கபரிவாரம் முஸ்லிம் சமுதாயத்தைத் தாக்கும் விதத்திலான பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. மதமாற்றம் முஸ்லிம் தரப்பில் மட்டும் நடக்கும் காரியமல்ல. முஸ்லிம் சமுதாயத்தில் மட்டுமே மதமாற்றங்கள் நடைபெறுகின்றன என்பது போன்ற தோற்றம் தரும் பிரச்சாரங்கள் நடைபெறுவது துரதிஷ்ட வசமானது" என்று மேலும் அவர் கூறினார்.

இவ்வளவு தெளிவாக வழக்கு தொடுக்கப்பட்ட இளைஞர்களுக்குச் சாதமாக வழக்கில் வாதிகளாகச் சேர்க்கப்பட்டவர்களே கூறிய பின்னரும் அவர்கள் மீதான வழக்கு, பொய் வழக்கு என அப்பட்டமாக தெரிந்த பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாததோடு, முன் ஜாமீனும் வழங்காமல் வழக்கை மாற்றி வைத்து சட்டத்தை மீறியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

அத்தோடு நின்றிருந்தால் கூட, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எப்போதும் போல் அரசு நிர்வாகங்கள் செயல்படுவது தானே என முஸ்லிம் சமுதாயம் சமாதானமடைந்திருக்கும். ஆனால், அனைவருக்கும் சமமான நீதி, நியாயத்தை வழங்க வேண்டிய பாரபட்சமற்ற நீதித்துறை கூறிய கருத்துகளும் அரசுக்கு நீதித்துறை தானே முன்வந்து வழங்கிய உத்தரவும் மீண்டுமொரு "நான் குதிருக்குள் இல்லை" என்ற வேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண், கேரள மாநிலக் காவல்துறை ஐ.ஜி ரேங்கில் உள்ள ஓர் அதிகாரியின் நெருங்கிய உறவினராவார். மற்றொரு பெண், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பெஷல் ப்ராஞ்ச் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி மற்றும் கேரள மாநில பாஜக மாநிலத் தலைவர் ஆகியோரின் குடும்பத்தவராவார். இவர்களின் நெருக்குதலிலேயே இவ்விரு இளைஞர்களுக்கு எதிராக பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதும் நீதிதுறையினுள் புகுந்துள்ள கறுப்பு ஆடும் தலையாட்டி இருப்பதும் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

முஸ்லிம்களைச் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் தீராத ஆசையில், சங்கபரிவாரம் உருவாக்கிய ஒரு வாசகத்தை அதே வடிவில் பயன்படுத்திய கேரள உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி கெ.டி. சங்கரன், தன் வருகையின் ஆரம்ப இடம் எது என்பதைத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். "மதமாற்றம் நடத்துவதற்காக பள்ளி-கல்லூரி கேம்பஸ்களை மையமாக்கி லவ் ஜிஹாத் என்ற இயக்கம் செயல்படுவதாக" நீண்டகாலமாக சங்கபரிவார அமைப்புகள் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே வாசகத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே எடுத்தாண்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டிக்காக்கவும் அக்கிரமம், அநியாயங்களுக்கு எதிராக நீதி, நியாயத்தைப் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் சமநீதியை நிலைநாட்டவும் நடத்தும் பல்வேறு வழியிலான முயற்சிகளுக்கே இஸ்லாத்தில் "ஜிஹாத்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைத்தூதரும் முஸ்லிம் சமுதாயமும் மிகவும் மேன்மையானதாக கருதும் இச்சொல்லைச் சமூகத்தின் முன்னிலையில் மோசமானதாக சித்தரிக்கும் நோக்குடனே சங்கபரிவாரம் இது போன்ற வாசகங்களை உருவாக்குகின்றது.

"நீதிமன்ற கருத்துகள் அவமானகரமானவை"
- முஸ்லிம் ஜமாஅத் கவுன்ஸில் செயலர்!

"சங்கபரிவார சக்திகளின் பொய்ப் பிரச்சாரங்களை அப்படியே நீதிமன்றங்கள் ஒப்பிப்பது அவமானகரமானது" எனக் கேரள முஸ்லிம் ஜமாஅத் கவுன்ஸில் பொதுச் செயலர் வழக்கறிஞர். எ. பூக்குஞ்சு கருத்துத் தெரிவித்துள்ளார். "லவ் ஜிஹாத், ரோமியோ ஜிஹாத் போன்ற வாசகங்கள் ஃபாஸிஸ்ட், வர்க்க அமைப்புகளுடையது மட்டுமேயாகும். கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பது கிடையாது. அது போன்ற கட்டாய மதமாற்றங்கள் கேரளத்தில் நடைபெறுவதற்குள்ள உறுதியான ஆதாரங்கள் எதுவுமே இல்லை" எனவும் அவர் கூறினார்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் தங்களின் ஹிந்துத்துவ அஜண்டாவைச் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்குமே "லவ் ஜிஹாத்" என்ற வாசகத்தை சங்கபரிவாரம் உருவாக்கி, சமூகத்தில் பரவவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சில சங்கபரிவார அமைப்புகள் இதே வாசகத்தைப் பயன்படுத்தித் துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடத்தியிருந்தன.

அநாவசிய விவாதங்களை உருவாக்க வேண்டாம் என நினைத்தோ என்னமோ முஸ்லிம்களிடமிருந்து சங்கபரிவாரத்தின் இச்சொல் பிரயோகத்துக்கு எதிராக எவ்வித எதிர்ப்புகளும் அச்சமயங்களில் எழவில்லை. அல்லது சங்கபரிவாரத்தின் எப்போதும் போலான கடைசரக்கு என சமுதாயம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எல்லா மக்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, சங்கபரிவாரம் உருவாக்கிய அதே வாசகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தினை அவமானப்படுத்த முயன்றது முஸ்லிம்களுக்கு இடையில் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

இதற்கிடையில் "லவ் ஜிஹாத் அமைப்புக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கருத்துக் கூறியுள்ளனர் (விரிவாகப் பெட்டிச் செய்தியில்).

"நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்"
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

"லவ் ஹிஜாத் என்ற இயக்கத்தைக் குறித்தும் அதனுடைய செயல்பாடு, பொருளாதார மூலம் முதலானவற்றைக் குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள டிஜிபி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்ற நடவடிக்கையை வரவேற்கிறோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது கூறினார்.

"காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவை கூறியதாகப் பொய்க் கதைகளை முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகப் பரப்பும் சில ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தின் உண்மை நிலை வெளிவர வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதற்கு உதவும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அதே சமயம், சங்கபரிவார அமைப்புகள் பரப்பிய பொய்ச் செய்திகளைப் பின்பற்றி காவல்துறையும் ஊடகங்களும் பயன்படுத்திய 'லவ் ஜிஹாத்'என்ற சொல்லாட்சியை நாட்டின் உயர்ந்த பீடமான நீதித்துறையும் ஆய்வு செய்யாமல் அதே தொனியில் ஆள்வது நாட்டின் மதசார்பற்றத் தன்மைக்கும் நீதித்துறையின் சார்பற்ற நிலைபாட்டிற்கும் தகுதியான காரியமல்ல" என அவர் கூறினார்.

"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் செயல்படும் லவ் ஜிஹாத் என்ற அமைப்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்ற ரீதியில் ஒரு பிரபல பத்திரிகையின் இணைய எடிசனில் வந்த செய்தி உண்மைக்கு மாற்றமானதாகும். இந்தக் கதை, சங்கபரிவாரமும் ஊடகங்களும் இணைந்த ரகசிய கூட்டணி உருவாக்கும் முஸ்லிம் விரோதக் கதைகளில் ஒன்றாகும்.

"மதமாற்றத்தைக் குறித்தும் அதற்காக வரும் வெளிநாட்டு நிதியுதவியைக் குறித்தும் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியது தான். அதனை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தோடு மட்டும் நிறுத்தி விடாமல், எல்லா மதங்களிலும் நடக்கும் மதமாற்றத்தைக் குறித்தும் காதல் திருமணங்களின் விவரங்களும் தியான கேந்திரங்கள் மற்றும் ஆசிரமங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வர நீதிமன்றங்கள் ஆர்வம் காட்ட வேண்டும்" என அவர் மேலும் கூறினார்.

மடியில் கனமுள்ளவர்களுக்கே வழியில் பயமிருக்கும்! லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிணராய் விஜயன் சேர்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, கேரளத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லோகல்லோலப் படுத்தினர். சிபிஐக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் அவர்கள் தவறவில்லை. அதே போன்றே சில சங்கபரிவார அமைப்புகள் மீதும் காஞ்சி மடாதிபதி காமகோடி மீதும் வழக்குகள் தொடரப்பட்ட வேளைகளில், அவ்விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும் அவ்வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்குக் கொலைமிரட்டல்கள் வரை விடுக்கப்பட்டதும் நாடறிந்ததாகும். இவ்வகையான தேசப்பற்றை(!) இவர்கள் வெளிப்படுத்தும் அதே வேளையில், பயங்கரவாதம் தீவிரவாதம் என மக்களைப் பயமுறுத்தும் சொற்களால் மக்களிடையே சங்கபரிவாரத்தாலும் அரசு இயந்திரங்களாலும் ஊடகங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் மீது விசாரணை என அறிவிக்கப்பட்டால் முழு ஒத்துழைப்பு நல்கி தங்கள் தேசவிரோத(!) செயல்பாட்டைத் தெளிவித்து வருவது வியப்பளிக்கக் கூடியதாகும்!

ஜிஹாத் என்ற பரிசுத்தமான சொல்லுடன் லவ்(காதல்) என்ற சொல்லைச் சேர்த்து, ஆபாசப்படுத்த சங்கபரிவாரம் முயன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை விட ஒரு படி மேலாக நீதித்துறை "லவ் ஜிஹாத்" என்பதுடன் "ரோமியோ ஜிஹாத்" என்ற புதிய ஒரு நையாண்டி வாசகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சங்கபரிவாரம் ஒரு படி குதித்தால் அதனை விட இரண்டு மடங்கு குதிக்க தாங்கள் ரெடி என இந்திய நீதித்துறை செயலால் வெளிப்படுத்தியுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளக் கல்லூரி காம்பஸ்களில் முஸ்லிமல்லாத பெண்கள் இஸ்லாம் அல்லாத வேறு மதங்களில் உள்ள இளைஞர்களை விரும்பி திருமணம் புரிவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகும். இருப்பினும் இதுநாள் வரை இது ஒரு சமூகப் பிரச்சனையாக நீதிமன்றங்களிலோ அரசியல்வாதிகளிடமோ விவாதப்பொருளாகி இருக்கவில்லை. அதே சமயம், அப்பெண்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை மார்க்கமாக தேர்வு செய்த உடன், மிகப் பெரிய சமூகப்பிரச்சனையாக அது ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது.

அத்தோடு நீதிமன்றமே பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் எடுத்துக் கூறி, அதனை மோசமானதாக சித்தரிக்க முயன்றிருப்பதும் இயல்பான ஒன்றல்ல.

"லவ் ஜிஹாத்" எனும் இல்லாத ஓர் இயக்கத்தை - சங்கபரிவாரம் உருவாக்கி விட்ட கற்பனைப் பெயரை, தற்போது அகில இந்திய அளவில் அரசியலிலும் இறங்க தீர்மானித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்போடு தொடர்பு படுத்தி, நீதித்துறை இழுத்து விட்டிருப்பது திட்டமிட்ட சங்கபரிவாரத்தின் சதிச்செயல் என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிக அளவில் கிளப்பியுள்ளது (முஸ்லிம் சமுதாயத் தலைவர்களின் கண்டனங்களைப் பெட்டிச் செய்திகளில் காண்க).

நீதிமன்றத்தின் இந்த அடாவடித்தனமான முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ள அநீதமான கருத்துருவாக்கப் பின்னணியினைக் குறித்து ஆராய்ந்தால், மேலும் அதிர்ச்சி அதிகமாகின்றது!.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கேரளத்திலிருந்து இயங்கிய என்.டி.எஃப், தமிழகத்திலிருந்து இயங்கிய மனித நீதிப் பாசறை, கர்நாடகத்திலிருந்து இயங்கிய கே.எஃப்.டி என்ற கர்நாடகா ஃபெர்ட்டனிட்டி ஃபாரம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தென்னிந்திய அளவில் உருவாக்கிய முஸ்லிம் சமுதாயத்துக்கான சமூகநீதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட கூட்டு அமைப்பாகும். பின்னர், அரசியலில் களமிறங்கத் திட்டமிட்ட இந்த அமைப்பு, சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நடத்திய பிரமாண்ட பேரணியிலும் மாநாட்டிலும் மேலும் சில வட இந்திய மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து கொண்டன.

"நீதிமன்றக் கருத்துகள் எதிர்க்கப்பட வேண்டியவை"
- கேரள முஸ்லிம் ஜமாஅத் தலைவர்
"முஸ்லிம் சமுதாயத்தைப் பயங்கரவாத சமுதாயமாகச் சித்தரிக்க சில ஊடகங்களும் அமைப்புகளும் நடத்தும் பொய்ப்பிரச்சாரங்களில் நீதிமன்றமும் கைகோப்பது வருந்தத்தக்கதும் எதிர்க்கப்பட வேண்டியதுமாகும்" எனக் கேரள முஸ்லிம் ஜமாஅத் பெடரேசன் மாநிலத் தலைவர் கடைய்க்கல் அப்துல் அஸீஸ் மௌலவி கருத்துத் தெரிவித்துள்ளார்.

"பெற்றோர்களும் சமுதாயமும் அங்கீகரிக்காதக் கல்லூரி கேம்பஸ் காதல்கள் இங்குப் புதிய விஷயமல்ல. ஆனால், லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக சங்கபரிவாரம் நடத்தும் பிரச்சாரங்கள், கேரள மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கான தரம்கெட்டத் தந்திரமாகும். இது குறித்த உண்மை நிலவரங்களை அரசே விசாரணை நடத்திக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து பொய்த் தகவல்களைப் பரப்பி சமூகத்தில் பிளவை உருவாக்குவதற்குச் சங்கபரிவாரத்தின் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று அவர் கூறினார்.

இவ்வாறு மிகத் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்திற்கான சமூக நீதியைப் பெறும் நோக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, கேம்பஸ்களில் மாணவர் அமைப்பு எனப் பல நிலைகளிலும் தங்களின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் பெண்கள் பிரிவுத் தலைவியும் இந்த லவ், ரோமியோ விவகாரத்தோடு இணைக்கப் பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தால் வரம்பு மீறி அநீதமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான சங்கபரிவாரத்தின் திட்டமிட்டத் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பை அழித்தொழிக்க, சங்கபரிவாரம் பலகாலமாகப் பல பொய்ச் செய்திகளை இந்த அமைப்பின் மீது பரப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

தாங்கள் செய்யும் பல நிழலான செயல்களை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகளின் மீதும் சுமத்தி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதில் சங்கபரிவாரம் மிகப் பெரிய வெற்றியை இந்தியாவில் அடைந்துள்ளதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.

அவற்றில் சில பயங்கரவாதச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவை மழுங்கடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடையவர்களாக பின்னர் கைது செய்யப்பட்ட சங்கபரிவார பிரதிநிதிகள் தண்டனையிலிருந்தும் மக்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

"நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை உருவாகும்"
- எஸ்.கெ.எஸ்.எஸ்.எஃப் தலைவர்!


"சங்கபரிவாரத்தின் பொய்ச் சொற்களை நீதிமன்றங்கள் அப்படியே வரிக்குவரி உபயோகிப்பது, நீதித்துறையின் மீதான நம்பிக்கை மக்களிடையே தகர்வதற்குக் காரணமாகும்" என எஸ்.கெ.எஸ்.எஸ்.எஃப் தலைவர் நாஸர் ஃபைஸி கருத்து தெரிவித்துள்ளார்.

"நாட்டின் பல்வேறு இடங்களில் ஜனநாயகம் தகர்க்கப்படும் போதெல்லாம், மக்கள் நம்பிக்கை வைப்பது நீதித்துறையின் மீதாகும். ஆனால் அந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், நீதிமன்றங்கள் சங்கபரிவாரத்தின் ஸ்பீக்கர்களாக மாறுவது பீதியை ஏற்படுத்துவதாகும்" எனக் கூறிய அவர், "ஒரு பக்கத்தில் மதமாற்றத்தை எதிர்த்தும் அதே நேரத்தில் 'தாய்மதத்துக்குத் திருப்பப்படுவதை' ஆதரித்தும் நடித்து மதமாற்றம் செய்வதை சங்கபரிவாரம் செய்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.

இதற்கு உதாரணமாக, தென்காசியில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளே தங்களது சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் மீது கட்டிவைக்க முயன்றதும் பின்னர் உண்மை வெளிப்பட்டு போய் கேவலப் பட்டு நின்றதும் நாடறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கு ஊடகங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் செய்ததாக வெளியான போது இடம் பிடித்ததைப் போன்ற முக்கியத்துவம் உண்மையான சங்கபரிவார ஏஜண்டுகள் கைது செய்யப்பட்டபோது முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவ்வழக்கே தேய்ந்து, இன்று அவ்வழக்கு நடைபெறுகிறதா? என்பதே தெரியாத நிலையில் உள்ளது.

அதே போன்று மாலேகானில் சிமி அலுவலகம் முன்னிலையில் குண்டு வைத்த, இந்துத்துவ தீவிரவாதி சாமியாரிணி ப்ரக்யா சிங், அந்தக் "குண்டுவெடிப்புக்குக் காரணம் சிமிதான்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களை வாட்டி எடுத்தன. பின்னர் நடுநிலையாகச் செயல்பட்ட காவலர் கார்கரேயின் உதவியால் உண்மை வெளியான பின்னர், சங்கபரிவாரத்தின் தீவிரவாதத்தைக் குறித்து இன்று வாய் திறப்பார் யாருமின்றி, தீவிரவாதி ப்ரக்யா சிங் உல்லாசமாக இருந்து வருகிறார்.

அதே போன்று குஜராத்தில் நரவேட்டை மன்னன் மோடி தலைமையில் அப்பட்டமாக எரித்தும் வெட்டியும் சுட்டும் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்து விட்டு அதற்குக் காரணம் அதற்கு முன்னர் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணம் என்றும் அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும் வகையாகப் பொய் வியாக்கியானம்சங்கபரிவாரத்தால் அவிழ்த்து விடப்பட்டது. இன்று குஜராத்தில் நரவேட்டையாடிய கும்பல் அரசுப் பாதுகாப்புடன் சுகமாகச் சுற்றி வருகிறது.

இவ்வாறு தாங்கள் செய்யும் செயலை முஸ்லிம்கள் தலையில் கட்டி வைப்பதிலும் தாங்கள் செய்யும் படுபாதகச் செயல்கள் வெளியே வராமலிருக்க பொய்த் தகவல்களை முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் அமைப்புகள் மீதும் பரப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீதே ஊடகம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, மக்கள் என அனைவரின் கவனமும் பார்வையும் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வதும் அதன் மறைவில் தாங்கள் செய்யும் அராஜக, அட்டூழியங்களை எவருடைய கவனத்தையும் ஈர்க்கா வண்ணம் செய்து முடிப்பதிலும் சங்கபரிவாரம் மிகத் திறமையாக செயல்பட்டு வருவது கண்கூடு.

"நீதிமன்றக் கருத்துகள் வருத்தமளிக்கக்கூடியவை"
- இமாம்ஸ் கவுன்ஸில் சேர்மன்!


"சங்கபரிவாரம் உருவாக்கிப் பிரச்சாரம் செய்த லவ் ஜிஹாத், ரோமியோ ஜிஹாத் ஆகிய வாசகங்கள் நீதிமன்றத்திலிருந்தும் வெளியாவது வருத்தமளிக்கக் கூடியது" என இமாம்ஸ் கவுன்ஸில் கேரள மாநில சேர்மன் கரமனை அஷ்ரஃப் மௌலவி கருத்து கூறினார்.

"சங்கபரிவாரமும் சில ஊடகங்களும் நடத்திய பொய் பிரச்சாரத்தை நீதிமன்றம் தூக்கிப் பிடிப்பது அவமானகரமானதாகும். முஸ்லிம் சமுதாயத்தையும் முஸ்லிம் அமைப்புகளையும் தாக்கும் விதத்தில் நீதிமன்றத்தின் கருத்துக்கள் உள்ளன.

"கல்லூரிகளில் மதம் பார்க்காமல் மாணவ, மாணவியர் தங்களை ஒருவரையொருவர் விரும்புவதும் ஓடிப்போவதும் இங்கு சாதாரணமாக நடக்கும் சம்பவங்களாகும். அதனைப் பூதாகரமாக்கி மாற்று வியாக்கியானங்கள் வழங்குவது வெறுக்கத்தக்கதாகும். எவ்வகையான விசாரணையையும் இமாம்ஸ் கவுன்ஸில் வரவேற்கிறது. ஆனால் அதே சமயம், பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமுதாயத்தைக் கேவலப்படுத்த முயற்சிப்பது மோசமான விளைவுகளை உருவாக்கும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சங்கபரிவாரத்தின் முந்தைய பல சதிச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால், பத்தனம் திட்டை கல்லூரி நிகழ்விலும் அதே போன்றதொரு திட்டமிட்ட சதியே நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதிப் படுகிறது.

சங்கபரிவாரத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக, "முஸ்லிம் பெண்களைக் காதல் என்ற பெயரில் மயக்கிச் சீரழித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவதற்கும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இந்துவாகப் பிறக்க வைப்பதற்கும்" நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ரோமியோ இளைஞர் பட்டாளம் அளவுக்கதிகமாக வாரி இறைக்கப்பட்ட பணபலத்துடன் இயங்கி வருவதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளால் சங்கபரிவாரின் சுற்றறிக்கைச் சான்றோடு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகாத நடவடிக்கையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டுமெனில், அல்லது குறைந்த பட்சம் இந்துக்களிடையே அதன் இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்பது சங்கபரிவாரத்தின் திட்டமாகும்.

எவ்வாறு சங்கபரிவாரத்தின் திட்டமிட்ட தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் பலிகடாவக்கப்படுகிறதோ அதே போன்று அதன் இத்தகைய கேடு கெட்ட, கீழ்தரமான செயல்பாட்டிற்கும் ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக சங்கபரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பே இந்த லவ் ஜிஹாத் அமைப்பாகும். அதனுடன் ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், தங்களுக்குக் கேரளாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சிமியைப் போன்று இல்லாமல் அழித்தொழிக்கும் நோக்குடன், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய நீதித்துறையில் கறுப்பு ஆடுகளைப் புகுத்தித் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவற்குப் பயன் படுத்திக் கொள்ள முயன்று வெற்றியும் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது தற்காலிக வெற்றியா? நிரந்தர வெற்றியா? என்பது போகப் போகப் புரியும்.

எது எப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கையான நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டிய நீதித்துறையும் சிறிது சிறிதாக இவ்வாறு களங்கம் அடைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.

அரசின் எல்லாத் துறைகளிலும் சங்கபரிவார வெறியர்கள் புகுந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை தான். ஆனால், அது நீதித்துறை முழுவதும் புகுந்து செல்லரித்து அழிக்குமானால், கதி கெட்டு அழிவின் விளிம்புக்குச் செல்லும் சமுதாயத்தின் கோபக்கனல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற இயலாது! அதனை உணர்ந்து ஆரம்பத்திலேயே நீதித்துறையைத் தூய்மைபடுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்!

1 comment:

  1. even in Kerala[Muslim majority state] these things r happening means here n tamilnadu what can v do?

    ReplyDelete